Monday, July 29, 2013

இறுதி தீர்வு - படமும் பாடமும்

ராகேஷ் சர்மாவின் "இறுதி தீர்வு" என்ற படத்தை பார்த்தேன். இது குஜராத் படுகொலை பற்றிய படம் என ஏற்கனவே அறிந்திருந்தேன். இதில் என்ன தான் தீர்வு சொல்லப்பட்டிருக்கும் என படத்தை பார்த்தேன். ஆரம்பத்தில் இந்த படத்தை திரையிட தடை இருந்தது. குஜராத் படுகொலை பற்றிய படம் மற்றும் படத்திற்கு தடை என்றவுடன் படத்தில் வன்முறை காட்சிகள் இருக்குமோ என்றே நினைத்திருந்தேன். ஆனால் அதற்கு மாறாக படத்தில் ஒரு இடத்தில் கூட வன்முறை காட்சிகள் இடம் பெறவில்லை. குஜராத் படுகொலை நடந்த இடங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்திருக்கிறார் ராகேஷ் சர்மா.

வன்முறை காட்சிகள் இல்லாவிட்டாலும் படத்தில் எடுத்துரைக்கப்பட்ட அனுபவங்கள் நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. படத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் இந்து மதவெறியர்களின் பேட்டிகள் அவர்களின் துவேஷ பிரச்சாரங்களையும் பதிவு செய்கிறார். அவர்களின் பேட்டிகளினூடாக குஜராத் படுகொலை நடந்த இடங்களினூடாக நம்மையும் பயணிக்க செய்கிறார்.

குறிப்பாக அந்த படத்தின் ஆரம்பத்திலும், முடிவிலும் யுகேஜி படிக்கும் சிறுவனின் பேட்டி இருக்கும். படத்தின் முடிவில் வரும் பேட்டியின் சுருக்கத்தை பார்ப்போம்.

கேள்வி: பெரியவனான பிறகு என்ன ஆவாய்?

இஜாஸ்: சோல்ஜராவேன்! பிறகு அவர்களைச் சுடுவேன்!

கே: யாரை?

இ: இந்துக்களை!

கே: ஏன்?

இ: ஏன்னா, அவர்களும் இதைத்தான் செய்தார்கள்!

கே: நான் ஒரு இந்து. நான் மோசமானவன்னு நெனக்கிறியா?

இ: (யோசித்து) இல்லை.

கே: நீ ஒரு சோல்ஜர். என்னைக் கொல்லணுமல்லவா?

இ: (தலையசைத்து) ஆமா, நா வேற யாரையும் தாக்க மாட்டேன். இந்துக்களை மட்டும்தான் கொல்வேன்.

கே: சரி! நா ஒரு இந்து.

இ: இல்லை. நீங்கள் அவர்களில்லை.

கே: நான் அவர்களைப் போல இல்லையா?

கேள்வி: அப்புறம்?

இஜாஸ்: நீங்கள் ஒரு முசுலீம்.

அந்த குழந்தையைப் பொருத்த வரையில் இந்துக்கள் என்றால் கெட்டவர்கள் அதனாலேயே ராகேஷ் சர்மாவை நல்லவர் என்கிறான். தன் குடும்பத்தினரை கொலை செய்த மதவெறியர்களை தண்டிக்க வேண்டும் என நினைக்கிறான். சோல்ஜராகி இந்து மதவெறியர்களை கொல்லும் நோக்கம் எப்படி உருவானது என்பது படத்தின் துவக்கத்தில் இஜாஸின் பேட்டியில் வருகிறது.

இஜாஸ்: நான் இஜாஸ். யுகேஜியில் படிக்கிறேன். சமன்பூரை எரித்தார்கள். அதற்கு பின்னர் நான் இங்கு வந்து விட்டேன். அங்கு எல்லோரையும் வெட்டி கொன்றார்கள்.

கேள்வி: நீ அதை பார்த்தாயா?

இ: ஆம். எல்லோரையும் வெட்டினார்கள். அவர்கள் வாள் கொண்டு தாக்கினார்கள். என் தாத்தா வையும், சித்தியையும் வெட்டி கொன்றார்கள். தாத்தாவை காப்பாற்ற முயன்ற போது என் அப்பாவின் இரண்டு விரல்கள் துண்டாகி போனது. பெண்களை நிர்வாணப்படுத்தி பின்னர் வெட்டி கொன்றார்கள்.

கே: உனக்கு முன்பாக செய்தார்களா?

இ: ஆமாம். என் சித்தியையும் அப்படிதான் கொன்றார்கள்.

கே: யார் இதை செய்தது

இ: இந்துக்கள்

இவ்வாறு தன் கண் முன்னர் தனது குடும்பத்தினரையும் ஊர்க்காரர்களையும் வெட்டி கொன்றதால் தான் இஜாஸுக்கு இத்தனை கோபம். இந்து மதவெறியர்களை கொல்ல வேண்டும் என்கிறான். இதைப்போல் பாதிக்கப்பட்டது இஜாஸ் மட்டுமல்ல. இஜாஸை போன்று ஆயிரமாயிரம் சிறார்கள். வரலாற்றை மறந்தால் மீண்டும் மீண்டும் நாம் மதக்கலவர பூமியாக்கப்படுவோம்.

(Those who forget history are condemned to relive it! - George Santayana)
வரலாற்றை மறப்பவர்கள் மீண்டும் அதையே அனுபவிப்பார்கள்
- ஜார்ஜ் சந்தாயனா

குஜராத் படுகொலை நடந்து பதினொரு ஆண்டுகள் முடிந்து விட்டன. மறுபடியும் விஷப்பாம்புகள் தலை தூக்க ஆரம்பித்துள்ளன. ஆட்சியை பிடிக்க ஆங்காங்கே கலவரங்களை தூண்டவும் மத மோதலை உருவாக்க இந்து மதவெறியர்கள் விதவிதமாக வதந்திகளை பரப்பி வருகிறார்கள். உண்மைகளை அறிந்து கொள்ள இவர்களால் ஏற்பட்ட கடந்த கால சோதனைகளை நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

ஆயிரக்கணக்கானோரை கொன்று, பெண்களை வல்லுறவு செய்து, இலட்சக்கணக்கான முசுலீம்களின் வாழ்வாதாரங்களை அழித்த மதவெறியர்களை தனிமைப்படுத்துவோம். அரசியலில் ஆதாயம் பெறுவதற்கு மக்களை மத அடிப்படையில் பிரித்திட நினைக்கும் மதவெறியர்களை புறக்கணிப்போம்.

ஆயிரக்கணக்கில் நடந்த குஜராத் படுகொலையில் சொற்பமானவையே நீதிமன்றங்களில் வழக்குகளாக எடுத்து செல்லப்பட்டன. அவற்றிலும் பல வழக்குகளில் குற்றவாளிகளை விடுவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய நீதித்துறையினால் நியாயம் கிடைக்கவில்லை. குஜராத் படுகொலை செய்த இந்து மதவெறியர்களை அம்பலபடுத்தி அவர்களின் துவேஷ பிரச்சாரங்களை முளையிலே கிள்ளி எறிவோம். இனியொரு மதக்கலவரம் வராமல் தடுப்போம்.

ராகேஷ் சர்மாவிடம், அந்த குழந்தை இஜாஸ் கூறியது போல் நீங்கள் நல்லவர்களா? அல்லது மதவெறியர்களின் கொடூரங்களை வேடிக்கை பார்ப்பவர்களா? நீங்களே முடிவு செய்யுங்கள்.


தொடர்புடைய பதிவுகள்: